புதுடெல்லி: ஜஹங்கீர்புரியில் புல்டோசர் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கு அனுமதி மறுக்கும் டெல்லி போலீஸாரால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 16-ம் தேதி டெல்லி ஜஹங்கீர்புரியில் நடைபெற்ற அனுமர் ஜெயந்தி ஊர்வலம் கலவரமானது. இதில் இருதரப்பிலும் 24 பேர்களை கைது செய்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், கலவரத்தை காரணமாக்கி ஜஹங்கீர்புரியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், புல்டோசர் மூலம் அப்புறப்படுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் தடை விதித்த பின்பும் சுமார் 3 மணிநேரம் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்படவில்லை.
தற்போது உச்ச நீதிமன்ற வழக்கு இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், நேற்று முதல் பல்வேறு எதிர்கட்சிகள் ஜஹங்கீர்புரியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முயன்றனர். இதில், முதலாவதாக டெல்லியின் காங்கிரஸ் தலைவர் அஜய்மக்கான் தலைமையில் வந்த காங்கிரஸ் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரான டி.ராஜா தலைமையில் வந்த இடதுசாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதை எதிர்த்து மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் முன்னாள் எம்.பியான டி.ராஜா, வாக்குவாதம் செய்தும் பலன் கிடைக்கவில்லை. விவாதத்துக்கு பிறகு டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் உஷா ரங்கானி நேரில் வந்து இடதுசாரிக் குழுவினரை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து அங்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின்(ஐயூஎம்எல்) மக்களவை தலைவரும் எம்.பியுமான ஈ.டி.முகம்மது பஷீர் தன் குழுவினருடன் வந்தார். இதில், அக்கட்சியின் மக்களவை கொறடாவும் ராமநாதபுரம் தொகுதி எம்.பியுமான கே.நவாஸ்கனியும் இடம் பெற்றிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கிடைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் எம்.பி கே,நவாஸ்கனி கூறும்போது, ‘ஜஹங்கீர்புரியில் சட்டவிரோதமாக இடிப்பினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களை சந்திக்கச் சென்றிருந்தோம். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற முயன்ற எங்களை, மத்திய பாதுகாப்பு படையினரால் டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர். உச்ச நீதிமன்ற தடை உத்தரவும் மீறி இதில் இந்தியாவின் ஜனநாயகமும் இடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மறுநாளே இந்த இடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜஹங்கீர்புரி ஊரவலத்திலிருந்து ஒரு புதிய நடைமுறை பின்பற்றத் துவங்கியுள்ளனர். இதில் கலவரத்தை உருவாக்கி கைது செய்வதுடன், அதன் பெயரில் சிறுபான்மையினர் மீது புல்டோசர்கள் ஏவி அவர்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. அனுமர் ஜெயந்திக்காக அனுமதியின்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்படவில்லை.
இதுபோல் சிறுபான்மையினர் மீதான அநீதியின் மீது மதசார்பற்ற நாட்டின் பிரதமர் மவுனம் காக்கிறார். இதனால், சர்வதேச அரங்கில் நம் நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார். இப்படி, அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளால், ஜஹங்கீர்புரியில் இன்னும் ஊரடங்கு பகுதியை போல் பதட்டம் நீடிக்கிறது.