`ஊரடங்கில் பிறந்த குழந்தைகளுக்கு பேச்சும் வளர்ச்சியும் தாமதமாகலாம்!'- ஆய்வும் மருத்துவர் விளக்கமும்

கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் நோயால் பாதிப்புகள் ஏற்பட்டதோடு, கூடுதலாக ஊரடங்கு காரணமாகவும் பல்வேறு பாதிப்புகள் இருந்தன. பொருளாதார சிக்கல்கள், குழந்தைகளின் கல்வி பாதிப்பு என பல பிரச்னைகள் இருந்தன.

இந்நிலையில், கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பிறந்த குழந்தைகள் பேசுவதற்கு அதிக நாள்கள் எடுத்துக்கொள்வதாக சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

Baby – Representative Image

LENA என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. காது, பேச்சுத்திறன் தொடர்பான கருவிகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் Talk pedometer என்னும் சிறிய கருவியைப் பயன்படுத்தி குழந்தைகளின் பேச்சுத்திறன் பற்றி ஆய்வு செய்துள்ளது.

இந்தச் சிறிய கருவி ஒரு மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளின் பேச்சின் நேரம் மற்றும் பேச்சின் தரம் குறித்த விரிவான தகவல்களைப் பதிவுசெய்து அதன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள் என நுட்பமாக அறிய முடியும்.

Baby (Representational Image)

இந்தக் கருவியின் மூலம் 3,000 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கோவிட்-19 ஊரடங்கு காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் அதற்கு முந்தைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் பேசுவதற்கு அதிக நாள்கள் எடுத்துக் கொள்வதாகத் தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வரவேண்டிய பேச்சுநிலைகளில் சற்று பின்தங்கி இருப்பதால் அவர்களின் மொழி வளர்ச்சி, திறன் வளர்ச்சியைப் பெறுவதற்கு சராசரியைவிட அதிக நாள்கள் எடுக்கலாம் எனக் கூறுகிறது ஆய்வு முடிவு.

இதுபற்றி மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் கேட்டோம். “ஊரடங்கு காலத்தில் எங்கும் வெளியே செல்ல முடியாமல் குழந்தைகள் முற்றிலும் அடைபட்டு வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார்கள். சமூகத்தொடர்பே அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் உள்ளவர்களை மட்டுமே அந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கும். பேச்சுத்திறன் மேம்படுவதற்கு மற்றவர்களுடனான தொடர்பு மற்றும் உரையாடல் மிகவும் அவசியமாகும்.

குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்

அதுவே அவர்களைப் பேச ஊக்கப்படுத்துவதோடு மொழித்திறனையும் மேம்படுத்தும். வீட்டிலேயே அடைந்திருந்தபோது அவர்களுடன்‌ பேச பெற்றோரைத் தவிர யாரும் இருந்திருக்க மாட்டார்கள். வெளியில் செல்வது அல்லது வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் வந்திருந்து குழந்தைகளுடன் உரையாடுவது என இருந்திருந்தால் அவர்களின் மொழித்திறன் மேம்பட உதவியாக இருந்திருக்கும்.

ஊரடங்கு காலத்தில் உடல்ரீதியாகவும் குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் இருந்தன. அவர்களுடைய நடவடிக்கைகள், விளையாட்டு போன்றவை குறைந்ததால் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் கூட ஏற்பட்டன.

குழந்தைகளின் பேச்சுத்திறன் அதிகமாவதற்கு முக்கியமான விஷயம் சமூகத்துடன் தொடர்பிலிருப்பதுதான் (exposure). அது ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்ததால் பேச்சுத்திறன் வளர்ச்சியடைவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.

Covid 19 Outbreak (Representational Image)

இதை எண்ணி நாம் அச்சப்படத் தேவையில்லை. பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். மழலையர்கள்கூட பள்ளி செல்லத் தொடங்கிவிட்டார்கள். எனவே, இந்தப் பேச்சுத்திறன் தாமதமானாலும் சமூகத்துடனான தொடர்பு அதிகரிக்கும்போது தானாகவே சரி ஆகிவிடும்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.