கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! சசிகலா

சென்னை: கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விகே சசிகலா வலியுறுத்தியுள்ளார். மர்மமான முறையில் இறந்த காவலர் ஓம் பகதூர் உள்ளிட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக,  சசிகலா வீட்டுக்கு சென்ற விசாரணை நடத்தி வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாளாக விசாரணை நடத்தியது. நேற்று சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 4 மணி நேரம் என மொத்தம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், , ‘கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறேன். முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன். கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால் என்னை பொருத்தவரை, என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம், அவர்களுக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். எங்களை பொருத்தவரையில் கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத்தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படிதான் பார்த்தார்கள்.

இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில், விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி திரு ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையும் நடந்துள்ளது, அதோடுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளார்கள். இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் பலியாகி உள்ளனர்.

எனவே, காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த, ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்களது காவலாளி திரு.ஓம் பகதூர், பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.’

இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.