நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் தனியார் பேருந்து சிக்கிக்கொண்ட நிலையில், அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதில் வள்ளியூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள இரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது.
சுரங்கப்பாதையைக் கடக்க முயன்ற தனியார் பேருந்து ஒன்று பாதை நடுவே பழுதாகி நின்றது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாற்றுப்பாதை வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
இந்த சுரங்கப்பாதை உரிய வடிகால் வசதிகள் செய்யப்படாமல் 8 மாதங்களுக்கு முன் அவசர கதியில் திறக்கப்பட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள், தண்ணீர் வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.