சென்னை : வாடிக்கையாளரை அலட்சியப்படுத்திய ‘பெனிபிட் பண்ட்’ நிறுவனம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, சூளை, ரங்கையா தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன், 45. இவர் பார்க் டவுன் பெனிபிட் பண்ட் லிமிடெட் நிறுவனத்தில், 2002ல், 32 ஆயிரம் ரூபாய் ‘டிபாசிட்’ செய்துள்ளார்.
இதற்கு 18 சதவீதம் வட்டி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகைக்கு வட்டி வழங்கப்படவில்லை. அதேபோல், டிபாசிட் தொகையும் திரும்ப வழங்காததால் பிரச்னை ஏற்பட்டது.இது குறித்து, சென்னை மாவட்ட தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிபாசிட் தொகை 32 ஆயிரம் ரூபாய், வட்டி 11 ஆயிரத்து 520 ரூபாய் என, மொத்தம், 43 ஆயிரத்து, 520 ரூபாய் திரும்ப வழங்க வேண்டும் என, வழக்கில் கோரினார். 2005ம் ஆண்டில் இருந்து வழக்கு நடந்து வந்தது. விசாரணையில், ‘சேவையில் குறைபாடு இல்லை; வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என, பெனிபிட் பண்ட் நிறுவனம் தெரிவித்தது.
இந்த வழக்கில், நீதிபதி தீனதயாளன், நீதித்துறை உறுப்பினர் வினோத்குமார் பிறப்பித்த உத்தரவு:நிறுவனம் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. மனுதாரருக்கு டிபாசிட், 32 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்க வேண்டும்.இத்தொகைக்கு தீர்ப்பு தேதி வரை, 18 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு, இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவுக்கு 10 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு பெனிபிட் பண்ட் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
Advertisement