புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக, டெல்லி அலுவலகத்தில் டி.டி.வி.தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து பெற முயன்ற வழக்கில், பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4ம் தேதி வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, சுகேஜ் சந்திரசேகரிடம் விசாரித்து வருகிறது. இவர் தற்போது திகார் சிறையில் உள்ளார். விசாரணையில் இவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த 12ம் தேதி டிடிவி.தினகரனிடம் அமலாக்கத் துறை 12 மணி நேரம் விசாரித்தது. நேற்றும் 2வது முறையாக அவரை டெல்லிக்கு அழைத்து அமலாக்கத் துறை விசாரித்தது. மதியம் 12.45 மணிக்கு ஆரம்பித்து 5 மணிநேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த டிடிவி.தினகரன் அளித்த பேட்டியில், ‘அமலாக்கத் துறையில் யார் வேண்டுமானாலும், யார் மீதும் குற்றம் சுமத்தலாம். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றைய விசாரணையின் போது, ‘நான் நிரபராதி’ என்பதற்கான சில முக்கிய ஆதாரங்களை அளித்துள்ளேன். கொடநாடு என்பது ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான இடம். எனவே, அங்கு நடந்த கொலை, கொள்ளைகள் குறித்து போலீசார் விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்,’ என தெரிவித்தார்.