சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்.23-ம் தேதி (இன்று) நடைபெற உள்ள விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா மற்றும் உயர் நீதிமன்ற நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளீர்கள்.
இந்த விழாவில், உச்ச நீதிமன்ற சக நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக முதல்வர் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில், தமிழக சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் பங்கேற்க உள்ளார்.
குற்ற வழக்கு நிலுவை
இந்நிலையில், அமைச்சர் எஸ்.ரகுபதி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள குற்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இச்சூழலில், அமைச்சர் ரகுபதி, தாங்கள் பங்கேற்கும் நிகழ்வில் பங்கேற்றால், அவர் உங்கள் அருகில் அமர வேண்டிய சூழல் ஏற்படும். அது, நீதித் துறை மற்றும் நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.
ஜெயலலிதாவுக்கு எதிராக…
கடந்த 2004-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், ஜெயலலிதா மீது இருந்த குற்ற வழக்கை காரணம் காட்டி, எதிர்கட்சியான திமுக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பல கடிதங்களை அனுப்பியது.
இதனால், அந்த திறப்பு விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. அதேபோன்று ஒரு நிகழ்வுதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது.
பரிசீலிக்க வேண்டும்
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்பது குறித்தும், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்தும், உங்களுடைய கனிவான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனவே, இதுகுறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.