புதுடெல்லி: ‘உள்நாட்டிலேயே அதிநவீன போர் விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்,’ என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையே இதுவரை இல்லாத வகையில் வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் செய்யப்பட்டன.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். நேரடியாக குஜராத் மாநிலம் சென்ற அவர், தனது முதல் நாள் பயணத்தில் சபர்மதி காந்தி ஆசிரமத்தை பார்வையிட்டார். குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அங்கு நேற்று காலை அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அணிவகுப்பு மரியாதையை ஏற்ற போரிஸ் ஜான்சன் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். பின்னர், மோடியும் அவரும் ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாடுகளையும் சேர்ந்த அமைச்சர்கள், உயர்மட்டக் குழுவினர் இதில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இருநாடுகள் இடையே பாதுகாப்பு, தாராள வர்த்தகம், தூய்மை எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய போரிஸ் ஜான்சன், ‘இன்று அருமையான பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாட்டு உறவுகளை அனைத்து வகையிலும் வலுப்படுத்தியுள்ளோம். இந்தியாவிலேயே அதிநவீன போர் விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பிரிட்டன் வழங்கும். ஏதேச்சதிகார நாடுகளின் (ரஷ்யாவை மறைமுகமாக குறிப்பிட்டார்) அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், இந்தியாவுடன் பிரிட்டன் வைத்துள்ள நட்புறவு, கடலில் புயல் நடுவே சிக்கிய போது கிடைக்கும் ஒரு ஒளி விளக்கு போன்றது. வான்வழி, கடல், தரை மார்க்கத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதிலும், இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும். இந்தோ – பசிபிக் பகுதியை சுதந்திரமாக வைத்திருப்பதில் நமது ஒத்துழைப்பை பலப்படுத்துவது இன்றியமையாதது,’ என்று கூறினார்.பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது. இரு நாடுகளும் பிரச்னைக்கு தீர்வுகாண தூதரக ரீதியான நடவடிக்கையிலும், பேச்சு வார்த்தையிலும் ஈடுபட வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது,’’ என்றார்.மோசடி செய்தவர்களுக்கு பிரிட்டனில் இடமில்லை: இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடி, விஜய் மல்லையா பற்றி போரிஸ் ஜான்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘தலைமறைவாக உள்ள நீரவ் மோடி, விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ள சில பிரச்னைகளால் அவர்களை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற மோசடி செய்தவர்களுக்கு பிரிட்டனில் இடமில்லை,’’ என்றார்.தாராள வர்த்தக ஒப்பந்தம் தீபாவளிக்கு கையெழுத்து: மோடி- போரிஸ் நடத்திய பேச்சுவார்த்தையின் மிகவும் முக்கிய அம்சமாக, இருநாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அமைந்தது. இந்தியாவுக்கு வழங்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிர்வாக சிக்கல்கள் இல்லாமல் இந்தியாவுக்கு வழங்குவதற்காக, ‘வெளிப்படையான பொது ஏற்றுமதி உரிமம்’ என்ற சலுகையை பிரிட்டன் வழங்க உள்ளது. இந்த தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இந்தாண்டு இறுதியில், தீபாவளிக்கு முன்பாக கையெழுத்திடவும் பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.போரிசின் கலகல கருத்துகள்: பேட்டியின் போது போரிஸ் ஜான்சன் மிகவும் உற்சாகமான கருத்துகளை பரிமாறிக் கொண்டார். அவர் கூறிய சில கலகலப்பு தகவல்கள் வருமாறு…* பிரதமர் மோடி எனக்கு மிகவும் ஸ்பெஷலான நண்பர். எனது வருகை எங்கள் உறவை ஆழப்படுத்தியுள்ளது. * நான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். எனது கை வலிமையுடன் உள்ளது. எனக்கு நல்ல பலனை தந்துள்ளது. * குஜராத் மக்கள் எனக்கு அருமையான, அசாதாரணமான வரவேற்பு அளித்தனர். இதுபோன்ற மகிழ்ச்சியான மக்கள் வரவேற்பை நான் பார்த்ததில்லை. உலகில் வேறு எங்கும் எனக்கு இது போன்ற வரவேற்பு கிடைத்திருக்காது.* மோடியின் சொந்த மாநிலத்தை முதன் முறையாகப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.* பிரமாண்ட வரவேற்பு அளித்த மோடிக்கும், இந்திய மக்களுக்கும் மிக்க நன்றி. * எல்லா இடங்களிலும் எனது படங்கள் வைக்கப்பட்ட பேனர்களை பார்த்தபோது, நான் சச்சின் டெண்டுல்கரை போலவும், அமிதாப் பச்சனை போலவும் உற்சாகமாக உணர்ந்தேன்.