போபால்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 48-வது அகில இந்திய காவலர் அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காவல் துறை நவீனப்படுத்தப்பட வேண்டும். காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தில் குற்றவாளிகளைவிட, காவலர்கள் 2 அடி முன்னே இருக்க வேண்டும். போதை பொருள், ஹவாலா, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட சவால்களை காவலர்கள் திறமையாக எதிர்கொள்ள வேண்டும். குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவிலான தகவல் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் செயல்படும் குற்றவாளிகளின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும். கரோனா காலத்தில் முன்வரிசையில் நின்று பணியாற்றிய காவலர்களின் தியாகத்துக்கு ஈடு இணை கிடையாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.