தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மின்தடை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் எழுப்பினர். மின் விசிறிகள் இயங்காததால் முதியோரும் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்போரும் தவித்துப் போயினர்.
மயிலாடுதுறையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக கூறி செயற்பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்களும் விவசாயிகளும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தடையின்றி மின்சாரம் விநியோகிக்குமாறு அவர்கள் முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதாகக் கூறி, மின்வாரிய அலுவலகம் மீது சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதையடுத்து, மின்வாரிய அலுவலர் பாதுகாப்புக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகரில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டதால் அதிருப்தியுற்ற அய்யனார் நகர் பொதுமக்கள், பர்மா காலனி சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்திய காவல் துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்களும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிக்கலாம்: `தமிழ்நாட்டுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க உதவிசெய்க’- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM