ராஞ்சி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிஹார் முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கியதாக போலியாக கணக்கு காண்பித்து அரசு கருவூலத்தில் இருந்து பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாலு மீது சிபிஐ 5 வழக்குகளை பதிவு செய்தது.
ஏற்கெனவே 4 வழக்குகளில் லாலு சிறை தண்டனை பெற்றார். 5-வதாக ராஞ்சியில் உள்ள தோரந்தா கருவூலத்தில் நடந்த ரூ.139 கோடி மோசடி தொடர்பாக லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து லாலு மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், ஜாமீன் வழங்ககோரி தாக்கல் செய்த மனுவை ஏற்று லாலுவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இத்தகவலை லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் தெரிவித்தார்.