கடலூர், காரைக்குடி, கரூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மின்வெட்டிற்கு காரணம் மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும். தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மாவட்டங்களில் ஏற்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் நிலையில் ,அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.