அ.தி.மு.க. பொதுக்குழு மே 2-வது வாரம் கூடுகிறது

சென்னை:

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து வருகிறது. கிளை கழகம் முதல் மாவட்ட கழகம் வரை தேர்தல் படிப்படியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாளுடன் (25-ந்தேதி) அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நிறைவடைகிறது. திங்கட்கிழமை 38 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடக்கிறது.

பிற மாநிலங்களுக்கான தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் இத்தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு சென்றுள்ளனர். 5 கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்வு அறிவிப்பு 26 அல்லது 27-ந்தேதிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சிகளின் அனைத்து அமைப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொதுக்குழு கூடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

1000-க்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். நடந்து முடிந்துள்ள கட்சி தேர்தலில் பெரும்பாலான பொறுப்புகளுக்கு ஏற்கனவே இருந்தவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் வரை தற்போது பொறுப்பில் இருப்பவர்களே நீடிக்கிறார்கள். கட்சி மாறி போனவர்கள் மற்றும் இறந்தவர்கள் மூலம் காலியான இடங்களுக்கு மட்டுமே புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கூட வேண்டிய பொதுக்குழு கொரோனா பாதிப்பால் தாமதமாக தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த மாதம் கூட்டப்படுகிறது. மே மாதம் 2-வது வாரத்தில் பொதுக்குழு கூடுகிறது.

சட்டசபை கூட்டம் மே 10-ந்தேதி வரை நடைபெறுவதால் அதனைத்தொடர்ந்து பொதுக்குழுவை உடனே கூட்டி கட்சியினர் வளர்ச்சி பணிகள், 2024 பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

வருகிற 10-ந்தேதி (செய்வாய்க்கிழமை)யுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைவதால் அந்த வாரத்திலேயே பொதுக்குழுவை கூட்டலாம் என தெரிகிறது. வழக்கம் போல வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தற்போது உள்ளார். இன்னும் நிரந்தரமாக அவைத்தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் அந்த பதவியை கொடுக்க வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.