ரம்புக்கனையில் இடம்பெற்ற பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்ப்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் அது முடியாமற் போனது.
பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் பொது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தாம் ஆகக்குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தியதாக கேகாலை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. யு. கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் திகதி இடம் பெற்ற ஆர்ப்பாட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேகாலை நீதவான் நீதி மன்றத்தில் நீதவான் வாசனா நவரட்ட முன்னிலையில் சாட்சியமளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ,இவ்வாறான அமைதியான பொது மக்களின் நடவடிக்கையின் போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆலோசனை வழங்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் ஆர்ப்பாட்டத்தின் ஏற்பட்ட குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்காக முழங்காலுக்கு கீழ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் நியமித்த குழு ,கேகாலை நீதவானிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு கலகம் அடக்கும் பிரிவு ரி-56 ரக நான்கு துப்பாக்கிகளையும் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 51 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அமைதியின்மை ஏற்பட்ட ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.