இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதையடுத்து வாழ்வாதாரம் தேடி அங்கிருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் இருந்து நேற்று வந்த 18 அகதிகளில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய ஒருவரும் அகதியாக வந்துள்ளார்.
மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பகுதியில் இருந்து வந்த பிரதீப் (30) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கை காவல் துறையில் பணியில் சேர்ந்ததாகவும், 15 மாதம் களுத்துறையில் காவலர் பயிற்சி முடித்து விட்டு யாழ்ப்பாணம், மன்னார் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. பணிச்சுமை காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பணிக்குச் செல்லவில்லை. தற்போது மனைவி, குழந்தைகளுடன் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதே போல நகுஷன் என்பவர் தனது கர்ப்பிணி மனைவி பியூலாவுடன் தமிழகம் வந்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் மன்னாரில் தச்சு வேலை செய்கிறேன், தொடர்ந்து பல மணி நேர மின்வெட்டு காரணமாக தச்சு தொழில் கடுமையாக பாதித்துள்ளது.
மின்சாரத்துக்கு மாற்றாக ஜெனரேட்டர்கள் உதவியுடன் தச்சு தொழில் செய்யலாம் என்றால் டீசல் விலை 400 ரூபாய் தொட்டுவிட்டது. இதனால் எனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விகுரியதாகியுள்ளது என்றார்.
எனக்கு திருமணம் நடந்து 5 மாதமாகிறது என் மனைவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவளுக்கு மருத்துவமனையில் மருந்து வாங்கி கொடுக்க முடியவில்லை.
அரசு மருத்துவமனைகளில் மருந்து இருப்பு இல்லை என்கின்றனர். இதே நிலை நீடித்தால் எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் முன் பட்டினி சாவில் இறந்து விடுவோமோ என்ற அச்சம் மனதில் ஏற்பட்டது.
எனவே எனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு நல்ல முறையில் பாதுகாப்பாக பிரசவம் ஆக வேண்டும் என ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு தமிழகத்துக்கு வந்துள்ளோம் என கூறியுள்ளார்.
பியூலா கூறுகையில், தற்போது உள்ள உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் ஒரு கர்ப்பிணி பெண் சாப்பிடும் ஆரோக்கியமான சாப்பட்டை என்னால் சாப்பிட முடியவில்லை.
விலை ஏற்றத்தால் போதிய சத்து இல்லாத பொருட்களை மட்டும் சமைத்து சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும். இப்படி சத்து இல்லாத சாப்பாடு சாப்பிட்டால் எப்படி குழந்தை சத்துடன் பிறக்கும் என்ற கவலையில் தான் உயிரை பணயம் வைத்து கடல் வழியாக தமிழகம் வந்து விட்டோம்.
எங்களுக்கு பிறந்த நாட்டை விட்டு வருவதற்கு மனமில்லை. இருந்தாலும் வயிற்றில் உள்ள என் குழந்தையின் விதி இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் போல் உள்ளது என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.