மும்பை கல்பாதேவி பகுதியில் செயல்பட்டு வரும் வைர மார்க்கெட்டில் தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறுகிறது. மிகவும் சிறிய அலுவலகமாக இருந்தாலும் அதிலும் கோடிக்கணக்கான மதிப்புடைய வைரம் இருக்கும். கல்பாதேவியில் செயல்பட்டு வரும் சாமுண்டா புல்லியன் என்ற கம்பெனியின் வியாபாரம் கடந்த 3 ஆண்டில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடிக்கு அதிகரித்தது. இதனால் அக்கம்பெனியின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த மாநில பொருள் மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள், அக்கம்பெனியின் மூன்று அலுவலத்தில் சோதனை நடத்தினர். கல்பாதேவியில் உள்ள வெறும் 35 சதுர அடி அலுவலகத்தில் சோதனை செய்த போது ஆரம்பத்தில் எதுவும் தென் படவில்லை. ஆனால் அலுவலகத்தின் ஓரத்தில் தரையில் இருந்த டைல்ஸ் லேசாக ஆட்டம் கண்ட நிலையில் இருந்தது.
உடனே அந்த டைல்ஸை எடுத்து பார்த்த போது, உள்ளே ஒரு சாக்குமூட்டை இருந்தது. அந்த மூட்டையை சோதனை செய்து பார்த்ததில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருந்தது. உடனே அதிகாரிகள் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அலுவலகம் முழுக்க இரு துறையினரும் சேர்ந்து சோதனை செய்து பார்த்ததில் அலுவலகத்தின் சுவரிலும் சிறிய அறை அமைத்து அதிலும் பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தவிர 19 கிலோ வெள்ளியும் இருந்தது. இப்பணம் குறித்து கம்பெனி உரிமையாளர்களிடம் விசாரித்த போது தங்களுக்கும் இப்பணத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணி முடிக்கவே 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. தொழிலதிபர் கணக்கில் வராத கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. பறிமுதல் செய்தவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.