கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 2,500 சதுர அடியில், புதிய அலுவலகம் கட்ட, அடிக்கல் நாட்டுவிழா இன்று மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையிலும், மாநகராட்சி மேயர் சரவணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது,
தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம். மின்சார துறையிலும் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது. தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால், மின்வெட்டு விரைவில் சீராகும். 75-வது பவள ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு நடைபயணம் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில் திருச்சியில் தொடங்கியது.
இந்த நடைபயணம் வருகிற 30-ந் தேதி வேதாரண்யத்தில் நிறைவு பெறுகிறது.
நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியின் தியாகத்தை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நடைபயண யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. கவர்னருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் தனிப்பட்ட முறையில் நடந்தது அல்ல.
அது தமிழக மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு. ஆனாலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை குறிப்பித்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.