வாஷிங்டன்: இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவை சார்ந்து இருப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை, இருந்தாலும் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவும், உடன்பாடு செய்யவும் விரும்புகிறோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.
இதனால் உலக அளவில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முன்வராத சூழலில் ஆசியநாடுகளுக்கு அதிக அளவில், சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது.
சர்வதேச சந்தை மதிப்பை விட ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் விலை குறைவாக இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் சப்ளை செய்கிறது. இதுபோல உணவுப்பொருட்கள், மருந்து போன்றவற்றை ரஷ்யாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. டாலரை புறக்கணித்து ரூபாய் மற்றும் ரூபிள் அடிப்படையில் இந்த வர்த்தகம் நடைபெறுகிறது.
ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யாவுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காததாலும், ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்ததாலும் அமெரிக்கா பலமுறை இந்தியாவை மறைமுகமாக விமர்சித்து வருகிறது. அதுபோலவே ரஷ்யாவுடன், இந்தியா வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் வருத்தம் தெரிவித்தது. ரஷ்யாவை ஒதுக்கி வைக்கும் உலக நாடுகளின் முடிவில் இருந்து இந்தியா தனித்து இயங்குவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது.
அமெரிக்கா எதிர்ப்பு
இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா தனது வான் பாதுகாப்பை அதிகரிக்க எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்க ரஷ்யாவுடன் 5 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
எங்களின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்டால் அமெரிக்க தடைகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்றார். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கும் துருக்கி மீது அமெரிக்கா ஏற்கெனவே தடைகளை விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள் வாங்கும் நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் நாங்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். நாங்கள் இந்த விவகாரத்தில் நேர்மையாக இருக்கிறோம். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். அதே நேரத்தில், நாங்கள் இந்தியாவுடன் வைத்திருக்கும் பாதுகாப்பு கூட்டாண்மையையும் மதிக்கிறோம்.
இதை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் இந்தநிலை தொடரும். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கான வழிகளை நாங்கள் பார்க்கிறோம். அது தொடரும். ஏனெனில் இது முக்கியமானது. இந்தியா தனது பகுதியில் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பிலும் உள்ளது. நாங்கள் அதையும் மதிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.