திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.கோடை விடுமுறை காலம் என்பதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், வார இறுதியில் பக்தர்களின் கூட்டம், 70 ஆயிரத்தை தொடுகிறது.முன்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேவஸ்தானம் டிக்கெட் இல்லாத பக்தர்களையும் திருமலைக்கு அனுப்பி வருகிறது.
வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள, 21 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பி வழிவதால், தர்ம தரிசனத்திற்கு, 24 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு, இரண்டு முதல் மூன்று மணி நேரமும் தேவைப்படுகிறது.இதனால், திருமலையில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மட்டும், 61 ஆயிரத்து 278 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்; 30 ஆயிரத்து 585 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
Advertisement