விஜயவாடாவில் இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறி ஒருவர் பலி: மனைவி, குழந்தைகள் கவலைக்கிடம்

விஜயவாடா: ஆந்திராவில் மின்சார ஸ்கூட்டர் எனப்படும் இ-ஸ்கூட்டரை ஒருவர் நேற்று வாங்கிய நிலையில் இன்று பேட்டரி சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து இருந்தபோதிலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன. இந்நிலையில் குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுடன், சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரதிநிதித்துவப் படம்

இந்தநிலையில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறிய மற்றுமொரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் நேற்று மின்சார ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டில் ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக ஆன் செய்து விட்டு தூங்கி விட்டார். அப்போது வீட்டில் அவருடன் மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர். இன்று அதிகாலை அந்த ஸ்கூட்டர் பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீ பிடித்து எரிந்தது.

அவர்களது வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மனைவி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த இரு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவக்குமார் நேற்று மின்சார ஸ்கூட்டர் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அதன் விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து நடக்கும் 2-வது சம்பவம் இதுவாகும். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.