உலகின் மிகப்பெரிய மருந்தகம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி,
இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டின் 7வது பதிப்பு ஏப்ரல் 25 முதல் 27 வரை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.

இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டில்  பேசிய அவர் கூறியதாவது:-
“இன்று, நாம் உலகின் மருந்தகமாக இருக்கிறோம், மேலும் இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாகவும் உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 17 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம்.
இந்திய மருந்துத் துறையானது அதன் மலிவு மற்றும் தரமான மருந்துகளுக்காக உலகளவில் அறியப்படுகிறது.
சமீபத்திய தொற்றுநோய் சூழ்நிலை  இந்தியாவின் மருந்துத் துறையை தன்னிறைவு பெறக் கற்றுக் கொடுத்து, இந்த துறையின் பின்னடைவுக்கு பின் எழுந்த எழுச்சியை காட்டுகிறது. அதை மேலும் வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான திட்டத்தை உருவாக்க தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் நாங்கள் ஈடுபடுவோம்.
புதுமைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அப்போது தான் துறை வளர்ந்து உலக சந்தையை கைப்பற்றும். குறைந்த மதிப்புள்ள ஜெனரிக் மருந்துகள் மட்டுமின்றி, காப்புரிமை பெற்ற மருந்து உற்பத்தியிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்தது.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுடன், கூடிய விரைவில் மருத்துவ சாதனங்களிலும் போட்டித்தன்மையை பெறுவோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் மருந்து மற்றும் மருத்துவ சாதனத் துறையின் மதிப்பை 2025 ஆம் ஆண்டளவில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.