திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீசாரை கொல்ல நடிகர் திலீப் தலைமையில் சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் நடிகை மஞ்சு வாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு ஒரு கும்பலால் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கார் டிரைவர் சுனில் குமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் திலீப் திட்டம் தீட்டியது தெரியவந்து அவரையும் போலீசார் கைது சிறையில் அடைத்தனர். தற்போது திலீப் நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இதற்கிடையே நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், தங்கை கணவர் சுராஜ் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக திலீப் உள்பட 6 பேரிடமும் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியரிடம் நேற்று குற்றப்பிரிவு போலீசார் திடீரென விசாரணை நடத்தினர். கொச்சியிலுள்ள ஒரு ஓட்டலில் வைத்து அவரிடம் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. அப்போது, போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக கிடைத்த ஆடியோவில் இருப்பது திலீப்பின் குரல் தானா என்பது குறித்து அவரிடம் போலீசார் கேட்டனர். மஞ்சு வாரியரிடம் நடத்திய விசாரணையில் போலீசுக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. காவ்யா மாதவன் இதற்கிடையே நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாததால் அவரிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.