திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர், படிப்பு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தனது அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். மகன் மருத்துவராகத் திரும்பி வருவான் எனக் காத்திருந்த தாய், கடந்த 4 நாட்களாக அவரது சடலத்துக்காக காத்திருப்பதாகக் கூறி கதறிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள இலுப்பப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவர் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவில் வேளாண்துறை அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பாளராக பணி செய்து வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும் பிரதீப் என்ற 25 வயது மகனும் ஒரு மகளும் இருந்தனர்.
காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் மகள் பெற்றோரைப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், ஒரே மகனை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளனர் தம்பதி. அதன்படி மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மகனை, பல லட்ச ரூபாய் செலவு செய்து, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாவோ நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த பிரதீப் கடந்த மாதம் பெற்றோரிடம் பேசும்போது, அடுத்த மாதம் ஊருக்கு வந்துவிடுவேன் எனக் கூறியிருக்கிறார்.
“எம்புள்ள வெளிநாட்டுல டாக்டருக்குப் படிக்கிறான். அடுத்த மாசம் ஊருக்கு வரப்போறான்” என பார்ப்பவர்களிடம் எல்லாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்த பெற்றோருக்கு, கடந்த 19ஆம் தேதி பிலிப்பைன்சில் இருந்து அந்த அதிர்ச்சித் தகவல் பேரிடியாக வந்திறங்கியது.
செல்போனில் பேசிய பிரதீப்பின் நண்பர் ஒருவர், பிரதீப் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதறி அழுதுள்ளனர். என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெளிவாகத் தெரியாத நிலையில், மகனின் உடலை ஊருக்குக் கொண்டுவர உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் அரசுத் தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அதனால் பிரதீப்பின் உடலை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனக்கு காசு, பணம் எதுவும் தேவையில்லை என்றும் மகனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர உதவி செய்தால் போதும் என்றும் சந்திரகலா கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
தனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் கொட்டியும் வங்கியில் கடன் வாங்கியும் மகனை மருத்துவம் படிக்க அனுப்பியதாகவும் அந்தக் கனவு தகர்ந்து போன நிலையில், அவரது உடலையாவது நல்லபடியாக ஊருக்குக் கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என்றும் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.