1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் அஸ்ஸாமை தளமாகக் கொண்டு சண்டையிட்ட வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய பா.ஜ.க அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. பயங்கரவாதத்தைக் கடுமையாக இந்தியா எதிர்க்க முன்வந்துள்ளது.
இந்தியாவின் எல்லையிலிருந்து இந்தியா குறிவைக்கப்பட்டால், எங்கள் எல்லையைத் தாண்ட தயங்கமாட்டோம். வங்க தேசம் நட்பு நாடு என்பதால் மேற்கு எல்லையில் உள்ள பதற்றம் கிழக்கு எல்லையில் இல்லை. ஆனாலும், கிழக்கு எல்லையில் தற்போது தீவிரவாத ஊடுருவல் முற்றிலுமாக குறைந்துவிட்டது. தற்போது சற்று அமைதி நிலவுகிறது.
வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது. ஏனென்றால், எந்த இடத்தில் நிலைமை சரியாகிறதோ அங்கெல்லாம் அரசு ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற்றுள்ளது. ஆனால் ராணுவம், எப்போதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் இருக்க வேண்டும் என விரும்புவதாக சொல்கிறார்கள் இது தவறான கருத்து. ஏனென்றால், இந்த சட்டம் பேணுவதற்குச் சூழ்நிலைதான் காரணமே தவிர ராணுவம் அல்ல” எனக் குறிப்பிட்டார்.