சென்னை: மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வரதாதால் மின் விநியோகத்தில் பற்றாக்குறை இருந்ததாகவும், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் நிலைமை சீராகிவிட்டதாகவும் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” 796 மெகா வாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 23, 2022
கடந்த சில வாரங்களாக நிலக்கரி தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. தற்போது நிலைமை மோசமடைந்ததன் விளைவாக மின்வெட்டு ஏற்பட துவங்கியுள்ளது. கோடை காலம் தொடங்கி, மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது மின்வெட்டு. தமிழகம், மஹாராஷ்ட்ரா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சில நாட்களாக பல மணிநேர மின்வெட்டு இரவு நேரங்களில் இருந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும் இப்போது சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.