புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 19-ந்தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. மறுநாள் 2,067 ஆகவும், 21-ந் தேதி 2,380, நேற்று 2,451 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 952 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 1,042 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அரியானாவில் 385, கேரளாவில் 315, உத்தரபிரதேசத்தில் 187, மகாராஷ்டிராவில் 121, மிசோரத்தில் 112 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பு காரணமாக கேரளாவில் விடுபட்ட 31 மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர டெல்லியில் நேற்று 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,22,149 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 1,656 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 15,079 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 838 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 19,13,296 டோஸ்களும், இதுவரை 187 கோடியே 46 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.