காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இன்று உடல்நலம் தேறி மீண்டும் களத்துக்கு வந்திருந்தார். டெய்ல்ஸ் என்றார் ஹர்திக். டெய்ல்ஸ்தான் விழுந்தது. இந்த சீசனில் எல்லாப் போட்டிகளைப் போலவே இதிலும் டாஸ் வென்ற அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது என்று சொல்ல வந்தால், அதுதான் இல்லை. இந்த சீசனில், முதல் முறையாக ஒரு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வெப்பமாக இருக்கும் போதே பேட் செய்துவிடுவது நல்லது என்றார் ஹர்திக். பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்னும் உணவு முறை தத்துவத்தைவிட, ஹர்திக்கின் கூற்று விசித்திரமாக இருந்தது. வெயிலில் பேட்டிங் செய்வது நல்லதுதான் என்றாலும், இந்த சீசனில் யாருமே எடுக்கத் துணியாத முடிவு என்பதால் என்ன நடக்கும் என எல்லோருமே ஆச்சர்யத்துடன் காணப்பட்டார்கள்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் XI: சாஹா, கில், அபிநவ் மனோகர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், திவேதியா, ரஷீத் கான், அல்சாரி ஜோசப், லோகி ஃபெர்கஸன், யாஷ் தயால், முகமது ஷமி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் XI: வெங்கடேஷ் ஐயர், சுரேஷ் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், நித்திஷ் ரானா, ரிங்கு சிங், ரஸல், டிம் சௌத்தி, ஷிவம் மவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி
சஹாவும், கில்லும் ஓப்பனிங் இறங்க, முதல் ஓவரை வீச வந்தார் உமேஷ் யாதவ். கொல்கத்தா மூன்று போட்டிகள் தொடர்ந்து தோற்றிருப்பதால், இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது . முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் எட்டு ரன்கள். சௌத்தி வீசிய முதல் ஓவரிலேயே கில் காலி. பில்லிங்ஸிடம் கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த சீசன் முழுவதுமே டூ டௌனில் களமிறங்கும் ஹர்திக், இந்த முறை ஒன் டௌனில் வந்தார். கேப்டன் என்றாலே இப்படித்தான். இரண்டு பவுண்டரியுடன் 11 ரன்கள். உமேஷ் பந்தில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் சாஹா. அடுத்து டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி. பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது குஜராத்.
உமேஷ் ஓவரில் சாஹா அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என அடித்தால், ஷிவம் மவி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி எனக் கலக்கினார் ஹர்திக் பாண்டியா. வருண் சக்ரவர்த்தியை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்து வரவேற்றார் ஹர்திக். பத்து ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது குஜராத். உமேஷ் பந்தில் ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி அடித்த சாஹா, அடுத்த பந்தையும் ஸ்கூப் அடிக்க முயன்று அது செட்டாகாது எனக் கடைசியில் மாற்றி பேக்வேர்டு பாயிண்டில் நின்றுகொண்டிருந்த வெங்கடேஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 75 ரன் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. நரைன் பந்தில் சிக்ஸர் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் தன் நூறாவது சிக்ஸைப் பதிவு செய்தார் டேவிட் மில்லர். அடுத்த ஸ்பெல்லிலும் நரைன் பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்தார் மில்லர். மறுமுனையில், இந்த சீசனில் தன் மூன்றாவது அரை சதத்தைக் கடந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
இந்த சீசனுக்கான ஒரு போட்டியை ஏற்கெனவே மில்லர் ஆடிக்கொடுத்துவிட்டதால், இந்தப் போட்டியிலும் பெரிய ஸ்கோர் எல்லாம் இல்லை. 29 ரன்களில் உமேஷிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சௌத்தி ஓவரில் ஹர்திக் தன் விக்கெட்டை ரிங்குவிடம் பறிகொடுத்து ஒரு அட்டகாசமான இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதே ஓவரில், கடந்த போட்டியின் கேப்டனான ரஷீத் கானும், டக் அவுட்டானார்.
சுவாரஸ்யமே இல்லாமல் சென்ற போட்டியை இரு இன்னிங்ஸிலும் சுவாரஸ்யமாக்கியது ரஸல்தான். ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச வந்தார் ரஸல். அதுவும் இந்த இன்னிங்ஸில் அதுதான் அவருக்கு முதல் ஓவர். 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது குஜராத். திவேதியாவும், அபிநவும் க்ரீஸில் இருந்தார்கள். முதல் பந்து. முடிந்தமட்டும் அதை டீப் மிட் விக்கெட் அடிக்கலாம் என முடிவு செய்தார் அபிநவ் மனோஹர். அங்கு நின்றுகொண்டிருந்த ரிங்குவிடம் அது தஞ்சம் புகுந்தது.
அடுத்து மீண்டும் அதே ரஸல், அதே ரிங்கு சிங். இந்த முறை அவுட்டானது லோகி ஃபெர்கஸன். லோகி அடித்த புல், டீப் மிட் விக்கெட் திசை நோக்கி வர, அதைக் கணித்து பின்னால் ஓடிச்சென்று பிடித்தார் ரிங்கு. ஹேட்ரிக் என நினைத்த மாத்திரத்தில் ஜோசஃப் சிங்கிள் தட்டிவிட்டார். ஷார்ட் பவுண்டரியாக இருக்கும் இடத்தைக் கணித்து, அதை பவுண்டரியாக மாற்றினார் திவேதியா. அடுத்த பந்தை ஆஃப் சைடில் அடிக்க, அது மீண்டும் மூன்றாவது முறையாக ரிங்குவிடம் சென்றது. ஒரே ஓவரில் மூன்று கேட்ச் என எங்கு நோக்கினும் ரிங்கு என்றாகிப்போனார் ரிங்கு சிங்.
அடுத்து உள்ளே வந்த யாஷ் தயாளுக்கு யார்க்கர் வீசினார் ரஸல். அதை அப்படியே ரஸலுக்குத் திருப்பி பாஸ் செய்தார் தயாள். கேட்ச் பிடித்து பந்தைத் தூக்கி எறிந்து கொண்டாடத் துவங்கிவிட்டார் ரஸல். ஆனாலும், அம்பயருக்கு நம்பிக்கை இல்லாததால் டிவி அம்பயர் வரை சென்று, அதற்கு பின்னர் அவுட் வழங்கப்பட்டது. வீசியது ஒரே ஓவர் அதிலேயே நான்கு விக்கெட்டுகள் என அசத்தினார் ரஸல்.
“ரிங்குவுக்கு டின்னர் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறேன். ஏனெனில் ரிங்கு குடிப்பதில்லை” என தன் நன்றியைத் தெரிவித்தார் ரஸல். கடைசி 17 பந்துகளில், 6 விக்கெட்டுகளை இழந்து சீட்டுக்கட்டு போல சரிந்தது குஜராத் டைட்டன்ஸ். மொத்தம் 156 ரன்கள்.
மிகவும் எளிதான இலக்கு. பில்லிங்ஸும், சுனில் நரைனும் ஓப்பனிங் இறங்கினார்கள். ஷமி பவுன்சர் வீச அதை பில்லிங்ஸ் தொட முயன்று சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஷமியின் ஓவரில் நரைனும் அவுட். நரைனின் பேட்டிங் சொர்க்கபுரி எல்லாம் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்று கொண்டிருந்த லோகி ஃபெர்கஸனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பவர்பிளேவுக்குள்ளாகவே மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது கொல்கத்தா. ஆம், லோகி வீசிய ஐந்தாவது ஓவரில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ராணா. அதே ஓவரில் தேர்ட் மேன் திசையில் சிக்ஸர் அடித்தார் ஸ்ரேயாஸ். அப்பாடா என்றார்கள் கொல்கத்தா ரசிகர்கள். பவர்பிளே முடிவதற்குள் ரிங்கு சிங்கும் ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்தார்.
யாஷ் தயாள் வீசிய முதல் பந்தில் கேப்டன் ஸ்ரேயாஸும் அவுட். பத்து ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு வெறும் 63 ரன்கள் எடுத்து தத்தளித்தது கொல்கத்தா. கொஞ்சம் நேரம் தாக்குப் பிடித்த ரிங்கு சிங்கும், யாஷ் தயாளின் அடுத்த ஸ்பெல்லில் தன் விக்கெட்டை இழந்தார். சரி, ரைட்டு மேட்ச் முடிந்தது என நினைத்திருந்த நிலையில் உள்ளே வந்தார் ரஸல்.
அதிர்ஷ்டவசமாக அவர் அடித்த பந்து அவுட்சைட் எட்ஜாகி, விக்கெட் கீப்பரைத் தாண்டி பவுண்டரிக்குச் சென்றது. அடுத்த பந்திலேயே ரஸல் அவுட். ஆனால், அந்தப் பந்தில் க்ரீஸைத் தாண்டிவிட்டார் தயாள். நோபால் என்பதால் ஃப்ரீ ஹிட்டும் வந்தது. ஃப்ரீ ஹிட்டை அடிக்க வந்தார் வெங்கடேஷ். ஃப்ரீ ஹிட்டுக்கான பந்தை ஒய்டாக வீசினார் தயாள். அடுத்த பந்தும் ஃப்ரீ ஹிட். ஆனால், அதில் வெறுமனே சிங்கிள் தட்டிவிட்டு வாய்ப்பை வீணடித்தார் வெங்கடேஷ். ரஸலுக்கு ஃபுல் டாஸ் வீச, டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர், அடுத்ததாக இன்னொரு சிக்ஸர் என பீஸ்ட் மோடுக்குக் சென்றார் ரஸல்.
ரஷீத் கான் பந்துவீச்சில், அபிநவ் மனோஹரின் அட்டகாசமான கேட்சால் வெளியேறினார் வெங்கடேஷ். ஐபிஎல்லில் வெங்கடேஷ், ரஷீத்தின் நூறாவது விக்கெட். யார் ஓவர் போட்டாலும் அதில் ஒரு சிக்ஸர் அடித்தார் ரஸல். ரஸலின் ஆஜாகுபானுவான உடலுக்கு 90 மீட்டர் சிக்ஸ் எல்லாம் எளிதாக வந்து கொண்டிருந்தன. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை. ஜோசப் வீசிய முதல் பந்தை லாங் ஆனில் சிக்ஸருக்கு அனுப்பினார் ரஸல். யார்க்கர் வீச முற்பட்டு, அது ஃபுல் டாஸாகிப் போக, பந்து 96 மீட்டர்கள் தூரம் பறந்தது. ஜோசப் வீசிய அடுத்த ஷார்ட் பாலை, புல் ஷாட்டால் அட்டாக் செய்தார் ரஸல். ஆனால், பந்து உயரம் போன அளவுக்கு தூரமாகச் செல்லவில்லை. லோகி அதை ஓடிச்சென்று அநாயசமாகப் பிடித்தார். ஆறு சிக்ஸர்களுடன் கிட்டத்தட்ட 200 ஸ்டிரைக் ரேட்டில் இருந்த ரஸல் வீழ்ந்தார். அதனுடனே கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பும் முடிந்தது.
கடைசியாக வீசிய இரண்டு ஓவர்களில் ரன்களை குறைத்துக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்திய ரஷீத் கான் ஆட்டநாயகாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்த மைதானத்தில், முதல் இன்னிங்ஸில் அறுபது ரன்கள் கடந்து பெரிய தூண் போல குஜராத்துக்கான ரன்களைக் கொடுத்த ஹர்திக்; இரண்டு இன்னிங்ஸ்லும் பேட்டிங் பௌலிங்கில் அசத்திய ரஸல்; 35 ரன்களுடன் முக்கியமான கேட்ச்களைப் பிடித்த ரிங்கு சிங்; இந்த மூவரைவிட ரஷீத் கான் அப்படி என்ன செய்தார் என்பதுதான் தெரியவில்லை.
உங்களுக்குத் தெரிந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள் மக்களே!