பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நீடித்த வளர்ச்சி இலக்கு குறித்து நாளை (ஏப்ரல் 24-ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருகின்ற 24ம் தேதி (நாளை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அன்றைய தினம் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதிமொழி எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதற்கான விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.