“சிறுபான்மையினருக்கு எதிரான முத்திரை இந்தியா மீது குத்தப்பட்டால், வெளிநாடுகளில் இந்தியப் பொருட்களுக்கான சந்தை கடும் பாதிப்புக்குள்ளாகும்” என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி குழுமம் சார்பில் டெல்லியில் பொருளாதார மாநாடு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரகுராம் ராஜன் பேசியதாவது:
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக பார்க்கப்பட வேண்டுமெனில், நாம் அனைத்து குடிமக்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அனைவரும் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அப்படி நடந்தால், அனைவரையும் அனுசரித்து செல்லும் கருணை மிக்க நாடாக இந்தியாவின் பெயர் விளங்கும். அது நமது பொருளாதாரத்துக்கும் நல்லது. ஏனெனில், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் பொதுவாக ஒரு நாட்டின் பொருட்களை வாங்கும் போது அதன் (நாட்டின்) குணநலன்களை பார்ப்பார்கள். “இந்த நாடு இத்தகைய சிறப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. எனவே இந்த நாட்டின் பொருட்களை வாங்குவதில் தவறில்லை” என்ற மனப்பான்மை தான் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இருக்கும்.
ஒருவேளை, இந்தியா மீது சிறுபான்மையினருக்கு எதிரான முத்திரை குத்தப்பட்டால் சர்வதேச அளவில் இந்தியப் பொருட்களின் சந்தை கடுமையாக பாதிப்பை சந்திக்க நேரிடும்.
இந்த முத்திரை சந்தையை மட்டுமல்ல; வெளிநாடுகளுடான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒரு நாட்டை இரண்டு விதமாக பார்க்கின்றன. ஒன்று, இந்த நாடு நமக்கு நம்பகமான கூட்டாளி என்ற பார்வை. இரண்டாவது, அந்த நாடு எவ்வாறு சிறுபான்மையினர்களை நடத்துகின்றன என்ற பார்வை. ஆகவே, இந்தியா இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையால் தான் சீனாவின் வெளிநாட்டு சந்தை அடிவாங்கியது. அதேசமயத்தில், ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுத்ததால் உக்ரைனின் சந்தை சிறப்பாக செயல்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM