போபால்: உத்தகாண்ட் மாநிலத்தை தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக தலைவர்களுடனான ஆலோசனையில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்போது பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியானது, நாட்டிற்கு பிரச்னைகளை மட்டுமே கொடுத்துள்ளது. எங்கே இருந்த அந்த கட்சி , தற்போது எங்கு சென்றுள்ளது என்பதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டப் பேரவை தேர்தலின் போது, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். அதன்படி, அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம். அதன்பின் படிப்படியாக மற்ற பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம்’ என்றார். பொது சிவில் சட்டம் குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் ஒருபக்கம் இருக்கும் நிலையில், பாஜக முதன் முதலாக உத்தகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி, இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரே மாதிரியான சட்டம் அமல்படுத்தப்படும். குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்து போன்ற விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டம் அமலாகும். தற்போது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகளுக்கு என்று தனிப்பட்ட சட்டம் அமலில் உள்ளது. இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் ஆகியோர் இந்து சிவில் சட்டத்தின் கீழ் வருகிறார்கள். பாஜக கொண்டு வர திட்டமிட்டுள்ள பொது சிவில் சட்டமானது அரசியலமைப்பின் 44வது பிரிவின் கீழ் அந்தந்த மாநிலத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் முதன்முதலாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.