கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம் என ஆளும் திமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது என தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 19ந்தேதி சட்டப்பேரவையில் கூறினார். ஆனால், அவரது வாய்முகூர்த்தம், அடுத்தடுத்த நாட்களில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, மின்வெட்டு பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்த நிலையில், மின்வெட்டுக்கு மத்தியஅரசுதான் காரணம் என்றும், போதுமான அளவு நிலக்கரி தராததே காரணம் என்று தமிழக முதல்வரும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் கூறி வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறி வருகிறது.
இந்த நிலையில் கும்பகோணத்தில் காங்கிரஸ் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே முழு காரணம் என்றும், மத்திய தொகுப்பில் இருந்து முறையாக நிலக்கரியை கொடுக்காதததால் தான் மின்வெட்டு ஏற்படுவதாக கூறியதுடன், அடுத்த 8 மணி நேரத்திற்கு தேவையான அளவு நிலக்கரி மட்டுமே தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆளுநருக்கு எதிரான கருப்புகொடி போராட்டம் குறித்து கூறியவர், ஆளுநர் என்ற தனிப்பட்ட நபருக்காக கருப்புக்கொடி காட்டப்படவில்லை என்றும், நீட் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காகவே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தாகவும் தெரிவித்தார்.