உக்ரைனின் ஒடெசா நகர் மீது விளாடிமிர் புடின் துருப்புகள் முன்னெடுத்த க்ரூஸ் ஏவுகணை தாக்குதலில் மூன்று மாத குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரேனிய மக்கள் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில், விளாடிமிர் புடினின் பரிசாக குறித்த தாக்குதலை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
மேலும், குறித்த தாக்குதலில் 18 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்பு வளாகம் ஒன்றில் குறைந்தது 6 க்ரூஸ் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பச்சிளம் குழந்தை ஒன்று, தமது பெற்றோருடன் முதல் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் நிலையில், பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளது உண்மையில் கொடூரமான செயல் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான உக்ரேனிய மக்கள் ஏப்ரல் 24ம் திகதி ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
ஆனால் ரஷ்ய துருப்புகள் கொடூர தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருவது, உக்ரேனிய மக்களுக்கு விளாடிமிர் புடினின் ஈஸ்டர் பரிசு என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளதுடன், ரஷ்ய படைகள் Azovstal தொழிற்சாலையை கைப்பற்ற தேவையில்லை என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, Azovstal தொழிற்சாலை உள்ளே சிக்கியிருக்கும் உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் இல்லை எனவும், மேலும் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.