புதுடெல்லி: நிதி ஆயோக்கின் புதிய துணை தலைவராக சுமன் கே பெரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறந்த பொருளாதார நிபுணரான ராஜீவ் குமார் நிதி ஆயோக்கின் துணை தலைவராக இருந்து வந்தார். நிதி ஆயோக் துணை தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா பேராசிரியர் பணிக்கு திரும்பியதை அடுத்து ராஜீவ்குமாரை அரசு நியமித்தது. இந்நிலையில் திடீரென அவர் தனது துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் 30ம் தேதியுடன் அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். இதனை தொடர்ந்து நிதி ஆயோக் புதிய துணை தலைவராக சுமன் கே பெரியை அரசு நியமித்துள்ளது. இவர் வரும் மே ஒன்றாம் தேதி முதல் துணை தலைவராக பொறுப்பேற்கிறார். இவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராகவும், தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாகவும் பணியாற்றி உள்ளார்.