பாட்னா: பீகார் மாநிலத்தில் ராஷ்ட்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வியாதவ் சார்பில் நேற்று முன்தினம் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். இது பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பீகார் மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறி பாஜவுடன் கூட்டணி அமைத்தார். இதனால், தேஸ்வியாதவும், நிதிஷ்குமாரும் எலியும், பூனையுமாக இருந்தனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அளித்த இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றது கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ தலைவர்கள் இடையே பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து, முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், ‘இப்தார் நிகழ்ச்சிக்கு ஏராளமானவர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். அரசியலுடன் இதற்கு என்ன தொடர்பு இருக்கிறது? நாங்கள் கூட இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். கூட்டணியை விட்டு விலகும் திட்டம் இல்லை’ என்றார்.