புதுடெல்லி: சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சிபிஎஸ்இ 11, 12-ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத் திட்டத்திலிருந்து பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகியப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதைப் போலவே 10-ம் வகுப்பு பாடத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு என்ற பிரிவில் வேளாண் துறையில் உலக மயமாக்கலின் தாக்கம் என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபயஸ் அகமது பயஸ் என்ற உருதுக் கவிஞரின் 2 கவிதைகள் மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் – வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு என்ற பிரிவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இடம்பெற்று இருந்தன. அந்த கவிதைகளும் நீக்கப்பட்டுள்ளன.
மேலும் சிபிஎஸ்இ தனது பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பரிந்துரையின் பேரில் இந்தப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டில் (2022-23) இந்தப் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருக்காது. பல ஆண்டுகளாக பாடத் திட்டத்தில் நீடித்த பாடங்களை முதல்முறையாக சிபிஎஸ்இ வாரியம் நீக்கியுள்ளது.