சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஜொள்ளு சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னா (25) ஆகியோர் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி இருவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 19.4.2022-ம் தேதி காலையில் இருவருக்கும் போலீஸார் சிற்றுண்டி வழங்கினர். சிறிது நேரத்தில் விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதித்த டாக்டர்கள், நாடி துடிப்பு குறைவாக உள்ளதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்தபோது வரும்வழியில் விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சுரேஷை மட்டும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவன் மீது இரண்டு கொலை வழக்குகள் இரண்டு கூட்டு கொள்ளை வழக்குள் உட்பட 6 வழக்குகள் உள்ளன. உயிரிழந்த விக்னேஷ் மீது இரண்டு கொள்ளை வழக்கு உட்பட 4 வழக்குகள் உள்ளன. போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்ததால் இணை கமிஷனர் பிரபாகரன் சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். கைதான சுரேஷ், பெயின்டராக வேலைப்பார்த்து வருகிறார். உயிரிழந்த விக்னேஷ், மெரினாவில் குதிரை ஓட்டும் வேலையைச் செய்துவந்தார் என்பது தெரியவந்தது.
விசாரணையின்போது கைதி விக்னேஷ் உயிரிழந்ததால் எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் 19.4.2022-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு வந்து ஜொள்ளு சுரேஷிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு 20-ம் தேதி விக்னேஷ் சடலம் அவனின் அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஐஸ்ஹவுஸ் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விக்னேஷ் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திக்கேயன் தகவல் தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை, துறை விசாரணை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில், சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படை தீபக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், விக்னேஷ் ஆகியோர் சம்பவத்தன்று போதையில் இருந்துள்ளனர். மேலும் போலீஸார் அவர்களைப் பிடித்ததும் கத்தியை எடுத்து காவலர்களை தாக்க முயன்றுள்ளனர். அதில் தள்ளுமுள்ளு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. விக்னேஷை அடித்தே போலீஸார் கொலை செய்துவிட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் விக்னேஷ் உயிரிழந்தது எப்படி என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.