Senthil Balaji slams Annamalai on Electricity resistance issue: டீக்கடையில் அமர்ந்து பேசுபவர்கள் கூட கவனமாக பேசுவாங்க, ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாக மின் தடை விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய மின்சாரம் வழங்கப்படாததே மின் தடைக்கு காரணம் என தெரிவித்திருந்தார்.
ஆனால், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், ”செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017 இருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: எம்.ஜி.ஆர் மாளிகையில் குடிக்க தண்ணீர் இல்லையா? பூங்குன்றன் கேள்வி
மேலும் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கவே TANGEDCO-வை பயன்படுத்துகிறார்கள்” என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சிலரது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. ஆனால் இது மக்கள் சார்ந்த பிரச்சனை, மலிவான அரசியலுக்காக மக்களிடத்தில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். நிலக்கரி கையிருப்பு இருந்தும் தூத்துக்குடியில் மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை என போற போக்கில் சொல்லியிருக்காங்க. பொதுவாக டீக்கடையில் அமர்ந்து பேசுறவங்க கூட கவனமா பேசுவாங்க. ஆனால் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்துக் கொண்டு, மின்சாரத்துறையில் நடைமுறைகள் என்ன, எதனால் இந்த பாதிப்புகள் என முழுவதுமாக தெரியாமல், அரைவேக்காட்டுத்தனமாக, மக்களிடத்தில் அந்த கருத்துக்கள் பரப்புகின்றார் என கூறியுள்ளார்.