தமிழக முதல்வராக இருந்த போது கருணாநிதி எப்போது டில்லி வந்தாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த, 1990களில் இப்போது இருப்பது போல புற்றீசல் போல தனியார் ‘டிவி’ சேனல்கள் கிடையாது. ஒன்றோ இரண்டோ தனியார் செய்தி சேனல்கள் மட்டுமே. வழக்கம் போல துார்தர்ஷன் உண்டு.
‘பிடிஐ, யுஎன்ஐ’ செய்தி நிறுவனங்களின் சீனியர் எடிட்டர்கள் இரண்டு பேர் மீது கருணாநிதிக்கு தனி கரிசனம். இருவரும் தமிழர்கள். ஏதாவது முக்கிய செய்தி சொல்ல வேண்டுமென்றால் அவர்களை அழைத்துதான் சொல்வார். காரணம், இந்த இரண்டு செய்தி நிறுவனங்களில் செய்தி வந்தால் இந்தியா முழுக்க சென்றுவிடும் என்பதால் கருணாநிதியின் அறிக்கைகள் முதலில் இவர்களுக்குத்தான் போய் சேரும்.
அதே சமயம் எப்போதும் ‘சன் டிவி’க்கும் முதல் மரியாதை உண்டு. அப்போது கலைஞர் ‘டிவி’ இல்லை. ஒரு சில சமயம் ஆங்கில பத்திரிகை நிருபர்கள் கேள்விகள் கேட்டால் உடனிருக்கும் முரசொலி மாறன் கருணாநிதிக்கு மொழி பெயர்ப்பு செய்து, அவர் தரும் பதிலை ஆங்கிலத்தில் சொல்வார்.
பல நேரங்களில் நேரடியான பதிலைத் தர மாட்டார். பூடகமாக சொல்வார். எதைச் சொல்ல வருகிறார், எப்படி செய்தியாக போடுவது என நிருபர்கள் குழம்பிப் போவார்கள்.
அப்போது நான் ஒரு தமிழக செய்தி குழுமத்திற்காக டில்லியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் காவிரி பிரச்னை சம்பந்தமாக கருணாநிதியிடம் நானும், நாளிதழ் நிருபர் ஒருவரும் கேள்வி கேட்டோம். ஆனால் அவரோ காது கேட்காத மாதிரி எங்களிடம் பல கேள்விகள் கேட்டார்.
உங்கள் குடும்பம் எப்படியிருக்கிறது? உங்கள் நிறுவனத்தில் சரியாக சம்பளம் தருகிறார்களா? என இப்படி எங்களை பர்சனலாக விசாரித்தார். கடைசி வரை எங்கள் கேள்விக்கு பதில் வரவே இல்லை.
முதல்வராக இருந்த போது திட்டக் குழு மீட்டிங்கிற்காக டில்லி வந்திருந்தார் கருணாநிதி.
திட்டக் குழுவின் அலுவலகத்திற்கு வந்து லிப்டிற்காக காத்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்தேன். அவருடன் இருந்த திமுக பிரமுகர் என்னை முதல்வருக்கு அறிமுகப்படுத்தினார்.
டில்லியில் முதல்வர் என்னதான் நிருபர்களைச் சந்தித்தாலும் மனம் விட்டு அதிகம் பேசுவதில்லை. சென்னை சென்றவுடனேயே விமான நிலையத்திலேயே பேட்டி அளித்து டில்லியில் நடந்த விஷயங்களை சொல்வார்.
இதை கருத்தில் கொண்டு, ‘சென்னையில் மனம் திறந்து நிருபர்களுடன் பேசும் நீங்கள் டில்லியில் அப்படி செய்வதில்லையே ஏன்?’ என அவரிடம் கேட்டேன். அதற்குள் லிப்ட் வந்துவிட்டது. உள்ளே ஏறப் போனவர் என்னை ஒரு வினாடி பார்த்தார். ‘நான் என்ன அனுமனா, நெஞ்சைத் திறந்து காட்ட…’ என சைகையோடு சொன்னவர் உடனே லிப்டில் ஏறி சென்றுவிட்டார்.
இதெல்லாம் ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது. இப்படி எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே பதில் சொல்லக்கூடிய அரசியல் தலைவர் கருணாநிதி. (முற்றும்)
Advertisement