மும்பையில் பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையா மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்துத்துவா கொள்கையை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மறந்துவிட்டதாகவும், எனவே ஹனுமன் பாராயணத்தை அவரது வீடு முன்பு பாடப்போவதாகவும் சுயேட்சை எம்எல்ஏ ரவி ராணாவும், அவரது மனைவியும் சுயேட்சை எம்.பி.யுமான நவ்நீத் கவுரும் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனைக் கண்டித்து சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி ராணாவையும், நவ்நீத் கவுரையும் போலீஸார் நேற்று இரவு கைது செய்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையா சந்தித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை முற்றுகையிட்ட சிவசேனா தொண்டர்கள் கற்களையும், காலணிகளையும் காரின் மீது வீசினர். இதில் கிரித் சோமையாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆங்காங்கே பாஜகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM