கீவ் : உக்ரைனின் மரியுபோல் நகரில், உக்ரைன் ராணுவத்தின் வசம் இருக்கும் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியில், நேற்று ஏவுகணைகளை வீசி, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த இரண்டு மாதங்களாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பிப்ரவரி 24ம் தேதி முதல் நடந்து வரும் இந்த போரில், ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, நாட்டின் கிழக்குப் பகுதிகளில் மட்டும், ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். லுஹான்ஸ்க் நகரில் ரஷ்ய வீரர்கள் நடத்திய பீரங்கி தாக்குதலில், நேற்று இரண்டு பேர் உயிரிழந்தனர். இதேபோல், கார்கிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும்; 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தாலும், அங்கு அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி, உக்ரைன் வசம் இருக்கிறது. அங்கு, 2,000 உக்ரைன் வீரர்கள் உள்ளதாகவும்; 1,000க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.முதலில், அந்த பகுதியை தனிமைப்படுத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய படையினர், நேற்று, ஏவுகணைகளை வீசி அங்கு தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, மரியுபோலின் புறநகர் பகுதியில் 200 கல்லறைகள் எழுப்பட்டிருந்தது, செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக நேற்று முன்தினம் தெரியவந்தது.
Advertisement