ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- மக்களின் குறைகளை கேட்டார்

ஸ்ரீபெரும்புதூர்:

நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து ராஜ் தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன் முதலாக கலந்துகொண்டார்.

மாநிலங்களில் நடந்த பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராமசபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்பதற்கு ஏற்ப கிராம சபையில் முக்கிய அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பங்கேற்றார்.

இந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவே அவர் ஸ்ரீபெரும்புதூர் வந்து தங்கினார். இன்று காலை 10.50 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கோடு கிராமத்திற்கு சென்றார்.

அங்கு அவரை கிராம மக்கள் உற்சாகத்துடன் கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கிராமசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது அந்த கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு என்னென்ன தேவை என்பது குறித்து பேசினார்கள்.

அவர்கள் சொன்ன குறைகள் மற்றும் கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக கேட்டுக்கொண்டார். அப்போது அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்து பதில் கூறினார். அதன்பிறகு இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது கிராம முன்னேற்றத்துக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் அதிகாரிகள் முன்னின்று விரிவாக செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.