சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனோ பரவல் அதிகரிப்பு எதிரொலியைத் தொடர்ந்து தமிழகத்தில் உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி , ஹரியானா , உத்தரப் பிரசேதம் ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் அதிகரித்துவரும் கரோனா தொற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான அனைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதம்: தமிழகத்தில் கரனோ பரவல் அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் கூடக் கூடிய இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து வலியுறுத்தவும் , 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் , முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி , மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரபடுத்தவும் தேவையான நபர்களுக்கு பிசிஆர் கரோனோ பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல் வேண்டும்.
மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்தல் , உருமாறும் ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்திடவும் , பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைந்துள்ள நிலையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாக குறைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ள அவர் அரசின் வழிகாட்டுதலான முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளி கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதலை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் 93 சதவீதம் ஒமிக்ரான் BA2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் , XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.