வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும், இந்த முறையில் மார்ச் மாதம் மட்டும் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவிற்கு பிரதமர்கள் அருங்காட்சியகம் கிடைத்துள்ளது. நாட்டு மக்களுக்காக இது திறக்கப்பட்டது. பிரதமர்களின் பங்களிப்பை நாம் நினைவு கூர்வது பெருமைக்குரிய விஷயம். அருங்காட்சியகங்களுக்கு பொது மக்கள் அதிகளவு நன்கொடை வழங்குகின்றனர். கோவிட் காலத்தில் அருங்காட்சியகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது அதிகரித்துள்ளது. வரும் விடுமுறை காலங்களில், இளைஞர்கள் அருங்காட்சியகங்களுக்கு செல்ல வேண்டும்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அடிப்படை தேவை. இயற்கையின் முக்கிய வளமாக தண்ணீர் உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் தண்ணீர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டது. ஹராப்பா கலாசாரத்திலும் தண்ணீரை சேகரிப்பதற்கு நவீன கட்டமைப்பு இருந்தது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நீர்நிலைகளை பாதுகாப்பதுடன், தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் மக்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஒரு காலத்தில் பூஜ்ஜியத்தை நாம் கண்டுபிடித்தோம். அதேநேரத்தில் ‘இன்பினிட்டி’ கொள்கையை ஆராய்ந்தோம். வேதங்களிலும் இந்திய கணிதத்திலும் பில்லியன் மற்றும் டிரில்லியன்களுக்கு அப்பால் எண்ணிக்கை செல்கிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த முறையில் கடந்த மார்ச் மாதம் ரூ.10 லட்சம் கோடி வரை பணபரிவர்த்தனை நடந்துள்ளது. தினமும் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஆன்லைனில் பரிவர்த்தனை நடக்கிறது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், சிறிய கடைகள் முதல் பழக்கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கிறது. இதனால், வணிகர்கள், நுகர்வோர் பயனடைகின்றனர். ஆன்லைன் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையால் பணத்தை எடுத்து செல்ல வேண்டியது இல்லை. ஏ.டி.எம்., ஐ தேடி அலைய வேண்டியதும் இருக்காது. ஒரு நாள் முழுவதும் கையில் காசு எடுத்து செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். ரூபாய் தொழில்நுட்பத்தின் சக்தி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Advertisement