சமையல் பொருட்கள், டி.வி, உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு.!

டெல்லி: சமையல் பொருட்கள், டி.வி, வீடியோ கேமரா உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55% ஆக உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சரக்கு & சேவை வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்கீழ் 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த மத்திய அரசு மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது. அதன்படி, அப்பளம், வெல்லம், பவர் பேங்க், கை கடிகாரம், சூட்கேஸ், ஹேண்ட் பேக், வாசனை திரவியங்கள், தொலைக்காட்சி பெட்டி (32 இன்ச் கீழ் உள்ள டிவி), சாக்லெட், சூவிங்கம், வால் நட், குளிர் பானங்கள், சிங்க், வாஷ் பேஷன், கண்ணாடிகள், காதணிகள், தோல் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ஆடைகள், வீடியோ கேமரா, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டு, மின் சாதனங்கள், சவரம் பொருட்கள், ஹேர் ட்ரிம்மர் என மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த உள்ளனர். அதிலும், குறிப்பிட்ட 143 பொருட்களில் 92% பொருட்களின் சரக்கு மற்றும் சேவை வரி என்பது 18%-லிருத்து 28%-ஆக அதிகரிக்க மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. வரி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பொருட்களில் பெரும்பாலானவை கடந்த 2017-ஆம் மக்களவை தேர்தலுக்கு முன்னர் வரி குறைக்கப்பட்ட பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர உலர் பழங்களான வால் நட்-ன் ஜி.எஸ்.டி வரி 12% வரை உயர்த்தப்படலாம். மேலும், ஐஸ் கிரீம் தயாரிக்க பயன்படும் கஸ்டர்ட் பவுடரின் ஜி.எஸ்.டி வரி 5%-லிருந்து 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது. சமையல் பொருட்களின் ஜி.எஸ்.டி வரியும் 12%-லிருந்து 18% ஆக உயர்த்தப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.