கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் ஆலோசனை

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி 26 ஆயிரம் ஆக உச்சத்தில் இருந்தது.

அதன்பிறகு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக ஒரு சில மாதங்களில் கொரோனா குறையத் தொடங்கியது.

அதன்பிறகு அரசு விதித்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வெகுவாக குறைந்துவிட்ட காரணத்தால் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் மார்ச் 3-ந்தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியது. ஆனாலும் இதை நிறைய பேர் கடைபிடிக்கவில்லை.

இந்த சூழலில் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவிய நிலையில், டெல்லி உள்பட வட மாநிலங்களிலும் கொரோனா பரவத் தொடங்கியது. இந்த கொரோனா இப்போது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி.யில் 1,420 பேரை சோதனை செய்ததில் 55 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளும் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் தற்போது சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் 55 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

இதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 8-ந்தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நாளை காலை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.

இதில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி பொதுமக்களுக்கு நாளை மாலை அறிவிப்பாக வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.