யெஸ் வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான ராணா கபூர், வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். ராணா கபூரும், டி.எச்.எஃப்.எல் நிறுவனர்களான கபில் மற்றும் தீரஜ் ஆகியோர் சேர்ந்து ரூ.5,050 கோடி அளவு முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கபில் மற்றும் தீரஜ் ஆகியோரும் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ராணா கபூர் கொடுத்துள்ள வாக்குமூலம் குறித்த தகவல்கள் அப்போது வெளிவந்துள்ளன. அதில் அவர், “முன்பு பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த முரளி தேவ்ரா என்னிடம் பிரியங்கா காந்தியிடம் இருக்கும் எம்.எப்.உசேனின் ஓவியங்களை வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நான் வாங்க மறுத்தேன்.
அவ்வாறு வாங்க மறுத்தால் காந்தி குடும்பத்துடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போகும் என்றும், பத்ம பூஷண் விருது கிடைக்காமல் போகும் என்றும், அதோடு எஸ் வங்கிக்கும் பின் விளைவுகள் ஏற்படும் என்று என்னிடம் தெரிவித்தார். முரளி தேவ்ராவின் மகன் மிலிந்த் தேவ்ரா எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து பிரியங்கா காந்தியின் ஓவியங்களை வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதோடு அடிக்கடி வேறு வேறு போனில் இருந்து போன் செய்து அடிக்கடி கேட்டுக்கொண்டார். நானும் அவரது போன் அழைப்புகளை தவிர்த்தேன். 2010-ம் ஆண்டு முரளிதேவ்ரா டெல்லியில் எனக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதிலும் ஓவியத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தினார். அதோடு வங்கிக்கு பிரச்னை ஏற்படும் என்று மிரட்டினார். எனவே மிரட்டலை தொடர்ந்து எனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, காந்தி குடும்பத்துடன் பகையை வளர்த்துக்கொள்ளக்கூடாது என்று கருதி அந்த ஓவியங்களை வாங்க சம்மதித்தேன்.
இதற்கான இறுதி ஒப்பந்தம் பிரியங்கா காந்தியின் அலுவலகத்தில் நடந்தது. மிலிந்த் தேவ்ரா இதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். இறுதியில் நான் எனது சொந்த வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் 2 கோடிக்கு காசோலை கொடுத்தேன். இந்த ஒப்பந்தம் முடிந்த சில மாதங்கள் கழித்து மிலிந்த் தேவ்ரா என்னைச் சந்தித்து, `நீங்கள் கொடுத்த பணம் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது’ என்று தெரிவித்தார். சில மாதங்கள் கழித்து சோனியா காந்தியின் அந்தரங்க செயலாளர் அகமத் படேலை சந்தித்த போது அவரும், `சோனியா காந்தியின் சிகிச்சைக்கு உதவியதற்காக விரைவில் பத்ம விபூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்!’ என்று தெரிவித்தார்” என்றார்.
அமலாக்கப்பிரிவு தற்போது தாக்கல் செய்து இருப்பது இரண்டாவது துணை குற்றப்பத்திரிக்கையாகும்.