திருவனந்தபுரம்:
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.
சுபைர் கொலை நடந்த மறுதினமே ஆர்.எஸ்.எஸ். கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து நடந்த இக்கொலைகளால் பாலக்காடு மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது.
அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்க தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுபைர் மற்றும் சீனிவாசன் கொலை தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இரட்டை கொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டாலும் பாலக்காடு மாவட்டத்தில் இன்னும் பதட்டம் தணிய வில்லை. இதையடுத்து அங்கு போலீஸ் தடை உத்தரவை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து வருகிற 28-ந் தேதி வரை பாலக்காட்டில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.