புதுடில்லி : டில்லி, ஜஹாங்கீர்புரியில் சமீபத்தில் நடந்த கலவர வழக்கில் கைதானோர் மீது, அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஜஹாங்கீர்புரியில் சமீபத்தில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலம் மீது, மற்றொரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் பெரும் கலவரம் உருவானது. இதில், முக்கிய குற்றவாளியான அதே பகுதியைச் சேர்ந்த முகமது அன்சார், 35, உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், முகமது அன்சாருக்கு பல்வேறு நபர்களுடன் முறைகேடாக பணப் பரிவர்த்தனை மற்றும் சூதாட்ட பணத்தில் பல சொத்துக்கள் வாங்கியது தெரிய வந்தது. இது குறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா சமீபத்தில் அமலாக்கத் துறையினருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, முகமது அன்சார் மற்றும் கலவர வழக்கில் கைதானோர் மீது, பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கூறினர்.பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும், அமலாக்கத் துறையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. அப்போது, பண மோசடி வழக்கில் மீண்டும் அவர்கள் கைது செய்யப்படுவதுடன், சொத்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
Advertisement