வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி இரவு, பெண் மருத்துவர் ஒருவர், தனது நண்பருடன் சென்றபோது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெண் மருத்துவரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு இளம் சிறார் உள்பட 5 குற்றவாளிகளில் பார்த்திபன், மணிகண்டன், சந்தோஷ்குமார், பரத் ஆகிய 4 பேர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.
இந்த நிலையில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான தடயங்கள் மற்றும் விசாரணை குறிப்புகள் அடங்கிய 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட காவல் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.