சென்னை: ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று இன்று (ஏப்.24) மாலை 4.25 மணிக்கு வந்தது. இது கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லக்கூடிய ரயில். இந்த ரயிலானது சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது, பிரேக் பிடிக்காத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த ரயில் வேகமாக சென்று ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையின் சுவற்றில் மோதி நின்றதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றிரண்டு கடைகள் லேசாக சேதமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே கடற்கரை மின்சார ரயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இன்று விடுமுறை நாள் என்பதால், மக்கள் கூட்டம் பெரிதாக இல்லை. மேலும் விபத்திற்குள்ளான ரயிலிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் ரயில்வே அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான ரயில் பெட்டியை, கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் விளக்கம்: இந்த ரயிலை லோகோ பைலட் சங்கர் இயக்கி வந்ததாகவும், ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால், பொதுமக்களுக்கோ, ரயிலை ஓட்டி வந்த லோகோ பைட்டிற்கோ எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.